Monday, April 13, 2015

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் - சிறுகதை

"ஆவி டாக்கீஸ்" - வெள்ளைத்தாள் டூ வெள்ளித்திரை..! 

 குறும்பட- சிறுகதை போட்டியில் ரூ. 2000 முதல் பரிசு பெறும் சிறுகதை..!


படைப்பாக்கம் :  திருமதி. தமிழ் முகில் பிரகாசம்  அவர்கள் 


அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் 
              
           டிங் ! டிங் ! டிங் ! “  பள்ளிக்கூட மணி ஓசை கேட்டதும்,  அதுவரை பேச்சும் சிரிப்பும், கூச்சலும் கும்மாளமுமாய் விளையாடிக் கொண்டிருந்த சிறார் கூட்டம், “கா ! கா ! “ என்ற குரல் கேட்டதும் தம் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்ள பறந்தோடி வரும் காக்கை இனத்தைப் போல, தம் அறிவுப் பசியைத் தீர்த்துக் கொள்ள தத்தம் வகுப்பறை நோக்கி ஓடினர்.

     அன்று முழு ஆண்டுத் தேர்வு விடுமுறை முடிந்து பள்ளி துவங்கியது. விடுமுறையில் சுற்றுலா சென்று வந்த இனிய நினைவுகள், அங்கு தாங்கள் கண்ட பல புதிய விஷயங்கள், உறவினர்களை சந்தித்த மகிழ்ச்சியான தருணங்கள், சிறாருடன் கோலி, பம்பரம், பட்டம் என ஆசை தீர நாளெல்லாம் விளையாடிய நினைவுகள், கோயில் திருவிழா மகிழ்வலைகள் என்று தத்தமது இன்ப தருணங்களை நண்பர்களுடன் பகிர்ந்தவாறு சிறார் சலசலத்துக் கொண்டிருந்தனர்.

    முதல் இருக்கையில் கண்மணியும் வள்ளியும் அருகருகே அமர்ந்திருந்தனர். கண்மணியின் கையில் புதிதாய் ஒரு கடிகாரம். நடுவில் வாத்து பொம்மையின் முகம். அதைத் திறந்தால், உள்ளே அழகான கடிகாரம். அதைக் கண்டதும் வள்ளிக்கு மிகவும் பிடித்துப் போனது. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அதை தொட்டுப் பார்த்துக் கொண்டாள். வள்ளி அதை தொட்டுப் பார்க்கும் போதெல்லாம் மெல்லியதாய் ஒரு புன்முறுவலுடன் வள்ளியை பார்ப்பாள் கண்மணி. சமயங்களில், ஆசிரியர் பாடம் நடத்தும் போதும், வள்ளியின் கவனம் கடிகாரத்தின் மீதே சென்றது. சிரமப்பட்டு தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள் வள்ளி.

           உணவு இடைவேளையின் போது, கண்மணி வள்ளியிடம்,
“ வள்ளி ! இந்தா புள்ள, நீ இந்த கடிகாரத்தை கொஞ்ச நேரம் கட்டிக்கோ. உனக்கு இது ரொம்ப புடிச்சிருக்குன்னு எனக்கு தெரியும். நான் சாயங்காலம் பள்ளிக்கூடம் முடிஞ்சு போகையிலே வாங்கிக்கறேன் “ என்றாள். ஆனால் வள்ளியோ, அவசரமாக “ ஐயோ ! வேணாம் புள்ள ! அது விலை உசந்ததா இருக்கும் போல இருக்கு. நான் ஏதாச்சும் தெரியாம உடைச்சோ, பழுதாக்கியோ வெச்சுட்டேன்னா, நீ வீட்டுல திட்டு வாங்குவ. என்னால புதுசா வாங்கியும் தர முடியாது” என்று மறுத்தாள்.

        மாலையில் வீடு திரும்பியதும், அன்று பள்ளியில் நடந்தவை ஒன்று கூட விடாமல் தன் தாய் தகப்பனிடம் கூறிக் கொண்டிருந்தாள்.
“ ஐயா, இன்னைக்கு அந்த காரை வீட்டுப் பிள்ளை கண்மணி இல்ல, அது புதுசா ஒரு கடிகாரம் கட்டியிருந்தது. பாக்கவே ரொம்ப அழகா இருந்துச்சு. வாத்து பொம்மை போட்ட கடியாரம் அது. அந்த பொம்மை மொகம் மூடி மாதிரி இருந்துச்சு. அந்த மூடிய திறந்ததும் உள்ள அழகா கடிகாரம். நம்ம வீட்டுல இருக்குற கடியாரத்துல இருக்கற மாதிரி முள் எல்லாம் இல்ல. அதுல மணி அப்படியே வந்துச்சு. அதுல இருக்குற பட்டன அமுக்குனா கீ ! கீ !  சத்தம் கூட வந்துச்சு. அத அப்படியே பாத்துட்டே இருக்கலாம் போல இருந்துச்சு. அந்த பிள்ளை என்னைய  அந்த கடியாரத்தை கட்டிப் பாக்க சொன்னுச்சு. ஆனா, நாந்தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்” என்றாள் வள்ளி.

        கடிகார நினைவுகளோடே உறங்கியும் போனாள். கனவிலும் அதே கடிகாரம் வந்து மகிழ்வூட்டியது. “ அழகா இருக்கு புள்ள. விலை உசந்ததா இருக்கும் போல. பத்திரமா வெச்சுக்கோ “ என்று தூக்கத்தில் பேசிக் கொண்டாள். மகளின் பேச்சைக் கேட்டு பெற்றோரும் புன்முறுவல் பூத்தனர். அடுத்த நாள் பள்ளிக்கூடம் முடிந்து, வீட்டிற்கு வந்த வள்ளி, பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தாள். வீதியில் “ ஜிங் ! ஜிங் !” என்ற ஒலி. வாசலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வள்ளியின் தந்தை,  “அம்மாடி வள்ளி ! இங்க வா தாயீ !  என்று அழைத்தார். “ அதோ ! அங்கன போற ஜவ்வு மிட்டாய்க்காரரை கூப்பிடு ! “ என்றார். வாசலுக்கு ஓடி வந்த வள்ளி, ஜவ்வு மிட்டாய்க்காரரை கூப்பிட, வள்ளியின் தந்தை “ அப்பா ! ஒரு கடியாரம் செஞ்சு குடுப்பா !” என்றார்.

        வள்ளிக்கு அவர் வைத்திருந்த பெரிய கழியின் உச்சியில் அழகாக சிங்காரம் செய்யப்பட்டு, காதுகளில் ஜிமிக்கி, கைகளில் வளையல், கழுத்தில் சங்கிலி அணிந்து, இரண்டு கைகளையும் ஜால்ரா போல சேர்த்து “ஜிங் ! ஜிங் ! “ என்று தட்டிக் கொண்டிருக்கும் பொம்மையை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது. பொம்மையின் அடியில், கழியில் ரோஸ் மற்றும் வெள்ளை நிறக் கலவையுடன் ஜவ்வு மிட்டாய். ஜரிகைக் காகிதம் சுற்றப் பட்டு இருந்த அந்த ஜவ்வு மிட்டாயிலிருந்து கொஞ்சம் எடுத்து அதை இழுத்து, வளைத்து, உருட்டி அழகான கைக்கடிகாரமாக மாற்றிக் கொடுத்தார் அந்த ஜவ்வு மிட்டய்க்காரர். சிறிது மிட்டாயை எடுத்து மோதிரமாக மாற்றி விரலில் அணிவித்து விட்டு, இன்னும் கொஞ்சம் எடுத்து அவளது கன்னத்திலும் ஒட்டி விட்டார். வள்ளிக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.

“ ஐயா ! இன்னொரு மயில் மிட்டாய் செஞ்சு வாங்கிக்கவா ? “ என்று ஆசை ஆசையாய் கேட்டாள் வள்ளி.

“ யாருக்கு தாயீ ? “, 

“ என் கூட படிக்கிற கண்மணிக்கு !” , 

 “சரி , வாங்கிக்கோ ! “ என்றபடி

“இன்னொன்னு செஞ்சு குடுத்துருப்பா “ என்றார் வள்ளியின் தகப்பனார்.
அதை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டாள் வள்ளி. “அம்மாடி! இப்போதைக்கு இந்த கடியார மிட்டாய வெச்சுக்கோ. இன்னும் செத்த நாள் பொறுத்து ஐயா உனக்கு நிஜ கடியாரமே வாங்கித் தாரேன் “ என்றார். மகிழ்ச்சியுடன் “ சரி ஐயா “ என்றவாறு குதித்தோடினாள் வள்ளி. அடுத்த நாள் பள்ளிக்கு செல்கையில், மறவாமல் ஜவ்வு மிட்டாய் வைத்திருந்த தூக்கினை எடுத்துக் கொண்டாள்.

        கண்மணியும் தன் தந்தை தனக்காக இருவேறு நிறங்களில் வாங்கிக் கொடுத்திருந்த கைகடிகாரங்களில், ஒன்றை தனக்கென வைத்துக் கொண்டு மற்றொன்றை ஆசைப்பட்டு கேட்ட தன் தோழிக்கு கொடுக்கப் போவதாய் சொல்லி தந்தையிடம் அனுமதி பெற்று வாங்கி வந்தாள். 

                                      **********

12 comments:

  1. எழுத்தாளர்க்கு நெல்லை என்று கருதுகிறேன்... முதல் பரிசு கதை ..வாழ்த்துக்கள் மேடம் .தொடருங்கள்

    ReplyDelete
  2. மாணவப் பருவத்தில் வெளிப்படும் கள்ளங் கபடமற்ற, பொருளாதாரம் பாதிக்காத நேசம் கதையில் வெகு அழகாய்.... முதல் பரிசுக்குத் தகுந்த கதைதான். எழுத்தாளருக்கு மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. சில நொடி சிநேகம் கதையின் குழந்தை வெர்ஷன் மாதிரி இருக்கிறது... முதல் பரிசுக்கு இன்னும் அதிகமாக எதிர்பார்த்திருந்தேன்....

    ஆசிரியருக்கு - தாள், தாழ் என்ன ஸ்பெல்லிங்?

    ReplyDelete
    Replies
    1. //தாள், தாழ் என்ன ஸ்பெல்லிங்?// வெளியிடும் போது நடந்த தவறு இது.. சரிசெய்யப்பட்டது.. :)

      Delete
    2. இரண்டுமே தாழ்ப்பாள் என்ற விதத்தில் ஒரே அர்த்தம்தான். தாழ் தொல்காப்பியர் காலத்தில் உபயோகப்படுத்தப்பட்ட ஒன்று. இப்போது தாள் என்று வழக்கில் "தாழ்ப்பாள்" என்ற அர்த்தத்திற்கு. இது தமிழ் உலகில் ஒரு சர்ச்சையாகவே உள்ளது. என்றாலும் இந்த இடத்தில் "தாழ்" என்றால் கொஞ்சம் அழகு கூடுதல்....

      Delete
  4. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள் - திருமதி. தமிழ் முகில் பிரகாசம் அவர்கள் எழுதிய சிறுகதை முதல் பரிசு பெற்றிருப்பதற்கு மனப்பூர்வமான வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. என்னமோ போங்க.. அரசன் அண்ணாச்சி'க்கும், அப்பாதுரை சார்'க்கும் இன்னும் தேர்வாகத சிறந்த கதைகள் (இருப்பின்) எழுதியவர்களுக்கும் அநியாயம் பண்ணீருக்கீங்க..

    ReplyDelete
  6. வாழ்த்துகள்! திருமதி தமிழ் முகில் பிரகாசம்.... முதல் பரிசு பெற்றமைக்கு....

    கதை நன்றாக உள்ளது. இல்லை என்று சொல்வதற்கில்லை. தலைப்பு சற்று மிகையானதோ என்று தோன்றுகின்றது. தலைப்பு ஹெவி. சப்ஜெக்ட் அதற்கு ஈடு கொடுக்கவில்லை....இது நல்லதொரு நட்பை...சிறுவயதில் ஏற்படும் நட்பைப் பற்றிச் சொல்லிச் செல்கின்றது கதை....என்பது தாழ்மையான கருத்து.....

    ஆவிக்கு வேண்டு கோள் மற்ற கதைகளும் பிரசுரிக்க முடிந்தால் நன்றாக இருக்கும்.....இல்லை என்றால் அவர்களது தளங்களில் வந்தால், அந்தத் தளங்களின் லிங்க் கொடுத்தால் நன்றாக இருக்கும்....

    -கீதா

    ReplyDelete
  7. வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். உண்மையில் இந்த நடுவர் குழு தேர்ந்தெடுத்ததுதானா?

    ReplyDelete
  8. தம்பி ரூபன் நடத்தும் அனைத்து போட்டிகளிலும் தவறாமல் பங்கு கொள்ளும் திருமதி. தமிழ் முகில் பிரகாசம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  10. போட்டிக்காக என்பது புரிந்தாலும், சற்று நீளமாக எழுதியிருக்க வேண்டிய முத்திரைக் கதையோ?

    ReplyDelete