Saturday, November 21, 2015

உலக சினிமா திருவிழா - முன்னோட்டம்.


                   கோவாவில் நடைபெறும் உலக சினிமா திருவிழாவிற்கு வர எண்ணுபவர்களுக்கு கீழ்வரும் பதிவு பயன்படும் என நம்புகிறேன்.




கண்கவர் கோவாவும் உலக சினிமா திருவிழாவும் 

                 எப்போதுமே உலக மக்களால் விரும்பி வரக்கூடிய ஒரு இனிமையான சுற்றுலாத்தலம். அதில் உலக சினிமா திருவிழாவும் சேர்ந்து 
கொண்டால்.. கோலாகலம் தான். இங்கு நான் இரண்டாவது வருடமாக தொடர்ந்து வருவதை பெருமையாக நினைக்கிறேன். (இது என்ன சபரி மலையா? இங்கே வருதற்கு பெருமைப்பட? என்று பலர் நினைக்கக் கூடும்.)
என் போன்ற சினிமா வெறியர்கள் மட்டுமே இதன் மகத்துவத்தை புரிந்து கொள்ளக் கூடும். மற்றவர்கள் நினைப்பதை நினைத்து விட்டுப் போகட்டும்.
சென்ற ஆண்டு ரூ.முன்னூறு மட்டும் நுழைவுக் கட்டணம் வைத்திருந்தார்கள். ஆனால் இம்முறை நுழைவுக் கட்டணமே ஆயிரம் ரூபாய். இந்த விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாக அளவுக்கு அதிகமான கூட்டத்தை 
கட்டுப்படுத்த என்று காரணம் கூறினாலும், சினிமா ஆர்வலர்கள் கடன் வாங்கியாவது இங்கே வந்துவிடுவார்கள் என்பதை இப்போது உணர்ந்திருப்பார்கள்.



தங்குமிடம்

                        மற்றொரு பிரதான பிரச்சனை -தங்குமிடம். சாதாரண நாட்களில் ஆயிரம் ரூபாய் வசூலிக்கும் ஹோட்டல்கள் இந்த நவம்பர் முதல் ஏப்ரல் வரை மூவாயிரத்தில் தொடங்கி சாதாரண மக்கள் தங்க முடியாத அளவிற்கு வசூலிக்கவும் செய்கிறார்கள். இந்த திருவிழாவிற்கு நண்பர்களோடு வருபவர்கள் நான்கைந்து பேர்களாக சேர்ந்து ஒரு அறையை வாடகைக்கு எடுத்து பகிர்ந்து கொள்வார்கள். திருவிழா நடக்கும் இடத்திற்கு சற்றே தள்ளி அரை எடுத்தால் கொஞ்சம் வாடகை குறைய வாய்ப்பிருகிறது. ஆனால் வந்து போகும் செலவு கொஞ்சம் அதிகமாக இருக்கும்.


போக்குவரத்து 

                       சென்னை, பெங்களூரு, மங்களூரு என எந்த இடத்திலிருந்து வந்தாலும் இரயிலில் வருபவர்கள் மடகாவ்(ன்) எனும் இடத்திற்கு வந்து சேர வேண்டும். பின்னர் இங்கிருந்து மினி பஸ்கள் கடம்பா பஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும். அதில் பத்து ரூபாயிலிருந்து இருபது ரூபாய் வரை பஸ்களை பொறுத்தும், கூட்டத்தை பொறுத்தும் வசூலிப்பார்கள். அங்கிருந்து 
ப்ரீபெய்ட் முறையில் பனாஜி (பஞ்சிம்) செல்லும் பஸ்சிற்கு நாற்பது ரூபாய் செலுத்தி ஷட்டில் ஒன்றில் பனாஜி வரை கொண்டு விடுவார்கள். (சுமார் பதினைந்து கிலோமீட்டர்கள்) அங்கிருந்து ஏற்கனவே புக் செய்த ஹோட்டலுக்கு செல்ல ப்ரீபெய்ட் டேக்ஸி, ஆட்டோ அல்லது பைக் டாக்ஸி போன்ற போக்குவரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆட்டோக்கள் கிட்டத்தட்ட சென்னையைப் போல் தான் அவர்கள் வாய்க்கு வந்த ரேட்டைக் கூறுவார்கள். ஹிந்தி தெரிந்தால் பேரம் பேசி பிழைத்துக் கொள்ளலாம். 

                          நீங்கள் தனியாளாக, அதிக சுமையில்லாமல் பயணிக்கிறீர்கள் என்றால் பைக் டேக்ஸி எடுத்துக் கொள்ளலாம். பைக் டேக்ஸி என்பது நாம் டூ-வீலருக்கு ஒரு டிரைவர் வைத்துக் கொள்வது போலத்தான். இரண்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிற்கு சுமார் முப்பதிலிருந்து நாற்பது வரை கேட்பார்கள். இவை அல்லாமல் பைக் அல்லது கார்களை நாம் வாடகைக்கு எடுத்தும் ஒட்டிக் கொள்ளலாம். நம் டிரைவர் லைசன்ஸ், பேன் (pan) கார்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றை கொடுத்துவிட்டு (ஒரிஜினல்) முன்பணம் செலுத்தினால் தினவாடகை பைக்கிற்கு இருநூறும், காரிற்கு ஆயிரமும் வசூலிக்கிறார்கள். கோவாவை சுற்றிப் பார்க்க நினைப்பவர்கள் வாடகைக்கு எடுத்துக் கொள்வது பெட்டர்.
திருவிழாவிற்கு வருபவர்களுக்கு இது தேவைப்படாது. பெரும்பாலான நேரங்கள் திரைப்படம் பார்ப்பதிலேயே செலவாகும் என்பதால் இது வீணே.


திருவிழாவிற்கு பயன்படும்  வழிமுறைகள் 


                         திருவிழாவிற்கு வருபவர்கள் முன்கூட்டியே ஆன்லைனில் பணம் செலுத்தி ஒரு டெலிகேட் ஐடி வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். (டெய்லி பாஸ்களும் வழங்கப்படும்)  கோவா வந்ததும் பனாஜியிலிருந்து மிராமர் செல்லும் பேருந்தில் ஏறி நான்காவது ஸ்டாப்பில் (மார்க்கெட் அல்லது ஐநாக்ஸ் ஸ்டாப்) இறங்கி ஹெல்ப் டெஸ்க் சென்று நம் டெலிகேட் நம்பரைக் கூறினால் உடனடியாக ஒரு ஐடியும் ஒரு கிட்டும் (KIT - திருவிழாவில் கலந்து கொள்ளும் படங்களைப் பற்றிய ஒரு சிறுகுறிப்புடன் திருவிழாவில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகள் பற்றிய புத்தகங்கள் இருக்கும்) கொடுப்பார்கள். அதை வாங்கிக் கொண்டு நேராக டிக்கட் கவுண்டர் சென்று நாம் அடுத்த நாள் பார்க்க வேண்டிய படங்கள் தேர்வு செய்து டிக்கட் பெற வேண்டும். ஒருவருக்கு மூன்று படங்களுக்கான டிக்கட் கொடுக்கப்படும். அதற்கு மேலும் பார்க்க விரும்பினால் டிக்கட் வாங்கியவர்கள் போக மீதம் இடமிருந்தால் டிக்கட் இல்லாதவர்களையும் உள்ளே அனுமதிப்பார்கள். பெரும்பாலான நாட்களில் இதில் இடம் கிடைக்கும்.

                           பிறகென்ன, திரைப்பட விழாவில் வரிசையாக வெவ்வேறு நாட்டு கலாச்சாரங்கள், தொழில்நுட்பங்கள், மனிதர்களின் உணர்வுகள் என எல்லாவற்றையுமே அவர்கள் திரைப்படங்கள் வாயிலாக பார்த்து ரசிக்கலாம். 
உடன் கோவாவின் "எழில்"களையும் கண்டு ரசிக்கலாம். நாளையிலிருந்து தினமும் நான் பார்க்கும் படங்களைப் பற்றிய சிறு குறிப்பு தரலாம் என்றிருக்கிறேன். (நேரம் ஒத்துழைக்கும் பட்சத்தில்) 


Wednesday, November 11, 2015

அன்புள்ள அஜித்திற்கு, (வேதாளம் விமர்சனம்)

அன்புள்ள அஜித்திற்கு,

                         உங்களின் அதி-தீவிர இரசிகன் ஒருவன் எழுதிக் கொள்வது.  ஆவி என்பது எனது பெயர். ஆவி என்றெல்லாம் பெயர் இருக்குமா என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. வேதாளம் என்றே ஒருவருக்கு பெயர் இருக்கும் போது ஆவி என்று இருக்கக் கூடாதா? (தமாசு.. தமாசு..) பொதுவாக, வெளியாகும் எல்லா திரைப்படங்களையும் முதல் இரண்டு நாட்களிலேயே பார்த்து விடுவேன். அதுவும் உங்கள் படம் என்றால் சொல்லவே வேண்டாம். பெரும்பாலும் முதல் காட்சி தான். ஆனால் இந்த வேதாளத்தின் டீசரோ, பாடல்களோ  என்னை ஏனோ அவ்வளவாக ஈர்க்கவில்லை. பல முறை கேட்டபின் 'ஆலுமா டோலுமா' என்ற அந்த தத்துவப் பாடல் மட்டும் கொஞ்சம் பிடித்தது. சரி படத்திற்கு வருகிறேன்.

                        விக்ரமாதித்தன் வேதாளம் என்ன செய்யும்?  தன்னை மடக்கிப் பிடித்து தோளில் போட்டுக் கொண்டு செல்லும் விக்ரமனிடம் புதிது புதிதாய் கதை சொல்லும். பின் அவன் தளர்வடையும் நேரம் பார்த்து முருங்கை மரத்தில் ஏறிவிடும். விக்ரமனும் மனம் தளர மாட்டான், வேதாளமும் ஓயாது. படிக்கும் வாசகர்களுக்கு மீண்டும் மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறதே என்ற சலிப்பு தோன்றவே தோன்றாது. அதுதான்,  அந்த விறுவிறுப்பு தான்  வேதாளக் கதையின் பலம். இந்த 'சிறுத்தை' சிவாவின் வேதாளமும் அந்த விறுவிறுப்பில் கொஞ்சமும் சளைத்ததல்ல.



                        படத்தின் சிறப்பாக நான் கருதுவது உங்கள் சிரிப்பு. முதல் காட்சியில் அப்பாவியாய் சிரித்து ஒரு ரவுடியின் மனதில் இடம் பெறுவதாகட்டும், பின்னர் வில்லனின் முன் நயவஞ்சகமாக சிரிப்பதாகட்டும் எங்களின் 'தல' ஸ்பெஷல் அந்த சிரிப்பு தான். பெண்கள் மட்டுமல்ல ஆண்களே விரும்பும் ஒரு பேரழகுச் சிரிப்பு அது. படத்தின் கதை என்னவோ தமிழ் சினிமா எனும் வாஷிங் மெஷினில் துவைத்து , கிழித்து தொங்கவிடப்பட்ட பழிவாங்கும் கதை தான் என்றாலும், சீறிப் பாயும் ஸ்க்ரிப்ட் மற்றும் உங்களின்  அசத்தல் நடிப்பு இரண்டும் தான் படத்தை வித்தியாசப் படுத்திக் காண்பிக்கிறது.

                          இந்தப் படம் சிலருக்கு 'பாட்ஷா' வை நினைவு படுத்தலாம், சிலருக்கு 'ஏய்' படத்தை நினைவு படுத்தலாம். ஏன் சிலருக்கு 'ஜனாவை' கூட நினைவு படுத்தலாம். பழிவாங்கும் கதைகள் எல்லாவற்றுடன் மக்கள் ஒப்பிட்டுப் பார்ப்பது தவறல்லவே. ஆனால் படம் பார்க்கும் சினிமா இரசிகன் ஒவ்வொருவனும் ஏதாவது ஒரு விஷயத்தின் பால் ஈர்க்கப்பட்டு தனக்கு படம் பிடித்ததாய் சொல்லியே நகர்ந்ததைக் கண்டேன். அவர்கள் இரசித்ததை நான் கண்கூடாய்ப் பார்த்த சாட்சியும் ஆனேன்.

                            சுமாராய் வந்திருக்கிறது என்று நான் முதல் பத்தியில் கூறிய ஆலுமா டோலுமாவிற்கு என் முன் சீட்டில் அமர்ந்திருந்த மூன்று வயது சிறுவன் ஆடிய ஆட்டத்தை பற்றி சொல்லவா? இரண்டாம் நாள், இரசிகர்களின் ஆரவாரம் இருக்கும் என்று தெரிந்தும் வந்திருந்த ஒரு வயதான தாய், லக்ஷ்மி மேனனிடம் நீங்கள் அன்பைப் பொழியும் காட்சியில் கண்ணீர் விட்டு தன் சேலைத் தலைப்பால் துடைத்ததை சொல்லவா? இல்லை அந்த பெண்மணியின் கணவர், தம்பி இராமையா இறக்கும் தருவாயில் கூறுவதைக் கேட்டு சிறிது கலங்கி, மற்றவர் பார்த்திடா வண்ணம் முகம் துடைப்பது போல் விழி நீரை அகற்றினாரே அதைக் கூறவா?

                         இசை என்பது இரைச்சலாய்த் தோன்றினாலும் அந்த மெல்லிய தேகம் கொண்டவனை மாஸ்ட்ரோ வுடன் ஒப்பிடாமல் அவன் வயதிற்கு இது சற்று மேலாகவே தோன்றியது. ஆயினும் கொஞ்சம் தேர்ச்சி அவசியமென தோன்றியது. நீங்கள் பெயரிட்ட அப்புவை மன்னிக்கவும் சிவபாலனுக்கு புது கெட்டப் என்ற போதும் பெரிதாய் நடிக்க ஸ்கோப் இல்லையே. சரி நாயகி ஸ்ருதிக்கே அவ்வளவு தான் ஸ்பேஸ் இருந்தது. வெறும் கிளாமர் டால் கதாப்பாத்திரம் என்றே சொல்லலாம் அவருக்கு. ஆனால் லக்ஷ்மி மேனன் புகுந்து விளையாட கிடைத்த வாய்ப்பை அப்படியே பயன்படுத்தி ஒவ்வொரு அண்ணன்களுக்கும் தன் தங்கையை திரையில் பார்ப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தி விட்டார்.

                         சரி தல, எந்த ஒரு படத்திலும் எதிரி பவர்புல்லா இருந்தால் தான் படம் மாஸ் ஆக இருக்கும் என்பது சினிமா விதி. எம்ஜியார், சிவாஜி , ரஜினி, கமல் என எல்லோருடைய படங்களும் இப்படித்தானே மக்கள் எதிர்பார்த்தார்கள், இரசித்தார்கள். ஆனால் இதில் வில்லர்கள் எல்லோரும் வருகிறார்கள், ஓரிரு வார்த்தை பேசுகிறார்கள். பின் மடிகிறார்கள். அவ்வளவு கெத்தாக இல்லையே என்று சிலர் கேட்கிறார்கள். முன் சொன்ன நாயகர்கள் ஹீரோ அவதாரத்தோடே வருவார்கள், ஹீரோவாகவே வாழ்வார்கள், வெல்வார்கள். ஆனால் வேதாளம் அப்படியல்ல, அவன் கெட்டவன், பணத்திற்காக எதையும் செய்யும் கேடுகெட்டவன். அவன் நல்லவனாக தேவைப்படும் ஒரு சிறு பொறி கிடைத்ததும் நல்லவனாக அவதாரம் எடுக்கிறீர்கள். ஸோ இதில் வில்லரும், ஹீரோவும் நீரே என்பதை புரியாதவர்களின் பிதற்றலாய்த் தான் நான் அதைப் பார்க்கிறேன்.

                          பெண்கள் வீட்டிற்குள் அடைந்து கிடப்பதற்கு ஒரு சில ஆண்கள் தான் காரணம், அவர்களை காந்தி கண்ட வீரப் பெண்ணாய், பாரதி கண்ட மாடர்ன் மங்கையாய் வலம் வர வேண்டும் என்பதை சொல்லும் காட்சி ஒன்றே போதும் தலைவா, தாய்மார்கள் நிச்சயம் போற்றிப் பாராட்டி குடும்பத்துடன் பார்த்து ரசிக்கப் போகிறார்கள். சூரியின் காமெடி எனும் சில மொக்கைகள் படத்தின் திருஷ்டிப் பொட்டு. சரி எல்லாமே அழகாய் அமைந்துவிட்டால் எப்படி?

                               மொத்தத்தில் வேதாளம் சிறார் முதல் பெரியவர்கள் வரை கண்டு ரசிக்கும்படி அமைந்து விட்டதில் உங்கள் இரசிகனாய் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. 'ஓபனிங் கிங்' என்ற பட்டத்தை இந்த முறையும் தக்க வைத்துக் கொண்டீர்கள். இம்முறை திரையுலக ஜாம்பவான் கமல் அவர்கள் படத்துடன் போட்டியிட்டும் சற்றும் தளர்வடையாத இந்த வேதாளம் பாக்ஸ் ஆபிஸ் என்ற முருங்கை மரத்தில் அசால்ட்டாக ஏறி நிற்பதை பெருமையுடன் பார்த்து இரசிக்கிறேன்.

                        - ஒரு நிறைவான திரைப்படத்தை பார்த்த மகிழ்ச்சியுடன்,
                                                             கோவை ஆவி.


பின்குறிப்பு:

                              தல, வேதாளத்தை பொறுத்தவரை அது சூப்பர் ஹிட் என்பது உறுதியாகிவிட்டது. படமும் சிறப்பாக இருந்த போதும் என்ற போதும் இந்த "மாஸ்" என்னும் முகமுடியை கொஞ்சம் கழற்றி வைத்துவிட்டு, வாலி, முகவரி போல் ஒரு சில மாறுபட்ட கதையம்சமுள்ள படங்களை உங்களிடமிருந்து  எதிர்பார்க்கிறோம். கலைஞானி நடித்த  வறுமையின் நிறம் சிகப்பு போல ஒரு சீரியஸ் சப்ஜெக்டில் நடிக்கலாம் தலைவரே..இந்தப் படங்கள்  மூன்று அல்லது நான்கு  வாரங்கள் ஹவுஸ்புல்லாக ஓடலாம். ஆனால் பொங்கலுக்கு இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக போட்டபின் எல்லோரும் மறந்து விடுவார்கள். So ஆலுமா டோலுமா Change your ஸ்டைலு மா!!
                     

     

Tuesday, November 10, 2015

தூங்காவனம் - விமர்சனம்

                     
                      பிரெஞ்சு படமான 'ஸ்லீப்லெஸ் நைட்ஸ்' இன் தழுவல் என்று சொல்லப்பட்டாலும் கமலஹாசனின் திரைக்கதை நமக்கு தமிழ்நாட்டு பாரம்பரியத்துடன் தான் இந்தப் படத்தை வழங்கியிருக்கிறது. டிரைலர் கொடுத்த த்ரில்லர் எபெக்ட் படத்தில் இருக்கிறதா? பார்ப்போம்.






சிறப்பு: 
                     தலைவர் அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்திருக்கிறார், இரண்டு மணி நேரம் நம்மால் அவரை கமல் என்று எண்ண முடியாதபடி கதாப்பாத்திரத்தின் தாக்கத்தை நமக்குள்ளும் புகுத்தி விடுகிறார். அதற்கு அவருடைய திரைக்கதையும், அல்டிமேட் நடிப்பும் காரணம் என்றால் மிகையாகாது.


கதை:
                 போதை மருந்து கும்பல் ஒன்றை பிடிக்கும் முயற்சியில் தன் மகனை அவர்கள் கடத்தி விட அவர்களிடமிருந்து மீட்கச் செல்லும் போது ஏற்படும் நெருக்கடிகள். அவற்றைத் தாண்டி தன் மகனைக் காப்பாற்ற முடிந்ததா என்பதே கதை.

 ஆவி Review:      
                   
                         ஒரே இரவில் நிகழும் கதையில் ஒரே பில்டிங்கில் எல்லோரும் தேடித் தேடி வருவதும், பொதுவாக 'பப்'களில் செக்யுரிட்டி காமிராக்கள் இருக்கும். அவற்றை புறக்கணித்து வில்லர் கமலைத் தேடி வருவதும், அதே போல் ஒரு துருப்புச் சீட்டைக் கையில் வைத்துக் கொண்டே அவரைத் தேடி அலைந்து கொண்டே இருப்பதும் லாஜிக் மீறல்கள் என்றாலும் கமலின் திரைக்கதை ஓட்டத்தில் அவை கண்டும் காணாமல்  கடக்கப் படுகிறது.

                         சிற்சில இடங்களில் தொய்வு, மற்றபடி படம் எங்கும் விறுவிறுப்புக்கு குறைவில்லை. ஆனால் த்ரில்லர் என்ற ஏதாவதொரு சம்சாரத்தை ச்சே சமாச்சாரத்தை எதிர்பார்த்து போனால் நிச்சயம் ஏமாற்றம் உண்டு.. பிரகாஷ்ராஜ், திரிஷா, ஆஷா, மது, கிஷோர், சம்பத், ஜெகன் என அனைவருக்கும் ஆங்காங்கே நடிக்க சின்ன சின்ன ஸ்பேஸ் உண்டு.. அந்த குட்டிப் பையனுக்கு நல்ல வாய்ப்பு,

                          குழப்பான கதையை தெளிவான வசனங்களும் காட்சியமைப்பும் காப்பாற்றியிருக்கிறது. ஆயினும் படம் முடிந்து வரும்போது படத்தில் சாம்ஸ் கேட்ட அதே கேள்வியை ஒரு முதியவர் என்னிடமும் கேட்டார் "இதுல கமல் போலீசா இல்லையா?", அவரிடம் "தெரியலையேப்பா " என்று சொல்ல நினைப்பதற்குள் கமலும் திரிஷாவும் போலிஸ் ஜீப்பில் வந்து அந்த பெரியவரின் வாயை அடைத்து விட்டனர்.

                           ஜிப்ரானின் இசையில் நல்ல முதிர்ச்சி. பாடல்கள் இல்லையென்ற போதும் பின்னணியில் இனிமை சேர்க்கிறார். கமலுடன் அவர் இணையும் நான்காவது படம் இது. ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு என எல்லாமுமே கைகொடுக்க கமலுக்கு இது மற்றுமொரு சூப்பர் ஹிட்.


பின்குறிப்பு:

"மது நாட்டுக்கு கேடு" என்று டைட்டிலில் போடுகிறார்கள். "மது உதட்டுக்கு நல்லது" என்று தலைவர் ஒரு 'குறியீடு' வைத்திருக்கிறார்.
                   



     

Monday, November 2, 2015

Sony Music acquires Thangamagan audio rights

Sony Music acquires the audio rights of 'Thanga Magan'. Thanga Magan features Dhanush, Samantha and Amy Jackson in the lead roles. K.S. Ravikumar and Radhika are playing the supporting roles. The movie is directed by Velraj, who delivered a blockbuster with Dhanush last year. The movie produced by Dhanush's home production 'Wunderbar Films'.

The Audio launch will be held in mid November and the movie is slated for December 18 release.

Surya Completes '24'

Actor Suriya completes his '24'. The actor tweeted on the social media thanking his colleagues who worked with him in the film. '24' is directed by Vikram kumar of 'Yavarum Nalam' fame. The movie is produced by his home banner "2D Entertainments". Samantha and Nithya menon playing lead roles in the movie.  A.R. Rahman composing music for the film.






He will be working with director Hari for 'Singam 3'.